மெரீனாவுக்குள் கலைஞரின் பேனா சின்னம் விவகாரம்.. சீமான் பரபரப்பு பேட்டி.. திமுக - நா.த.க தொண்டர்கள் மோதல்.!
மெரீனாவுக்குள் கலைஞரின் பேனா சின்னம் விவகாரம்.. சீமான் பரபரப்பு பேட்டி.. திமுக - நா.த.க தொண்டர்கள் மோதல்.!
பேனா சின்னம் அமைக்க கடலுக்குள் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் அதனை கடுமையாக எதிர்ப்பேன் என சீமான் பேசினார்.
மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவாக, மெரினா கடற்கரைக்கு அருகே உள்ள கடலில் பேனா போன்ற நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசாக திமுக பொறுப்பேற்றதை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற இன்று அரசின் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இயற்கை ஆர்வலர்கள், அதிமுக, திமுக, நா.த.க உட்பட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வந்திருந்தனர். அப்போது, கடலில் பேனா சின்னம் அமைக்க பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கிருந்த திமுகவினர் அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. கருத்து மோதல் அங்கு நடந்ததால், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பை வழங்கி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா சின்னம் நிறுவ நீங்கள் அறிவாலயத்தில் நிறுவிக்கொள்ளுங்கள் என்று கூறியதால் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், "கடலுக்குள் பேனா சின்னம் அமைக்க நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பள்ளிக்கூடத்தை புனரமைக்க பணமில்லை என்கிறார்கள், பேனா சின்னம் அமைக்க ரூ.89 கோடி எங்கிருந்து வருகிறது?.
வள்ளுவர் சிலையை கடலுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று கூறினால், அங்கு பாறை இருந்தது. அதன் மீது திருவள்ளுவருக்கு சிலை வைத்துள்ளோம். இங்கு கடலுக்குள் இருந்து கட்டுமானம் எழுப்ப வேண்டும். அதனை கடலுக்குள் 320 மீட்டர் தூரத்தில் வைக்கிறார்கள். பேனா சின்னம் வைக்கப்பட்ட பின்னர் அதனை பார்க்க செல்பவனால் அங்கு மாசு ஏற்படும். பேனா சின்னம் வைக்க முயற்சி எடுத்தால் கடும் போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்தார்.