"நடிகர்களுக்கு குளிர் விட்டு போச்சு; தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது" அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேச்சு
Minister jeyakumar about sarkar
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் சண்முகம் சர்க்கார் படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சர்க்கார் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் இதைப்போன்று பிரச்னைகளை ஏற்படுத்தியது இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக முடியாது. உங்களை முன்னிலைபடுத்தி கொள்ளுங்கள். அதற்காக யாரையும் புண்படுத்த கூடாது" என்று நடகர் விஜயை கடுமையாக கண்டித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.