மு.க ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறு- தமிழிசை.
m.k stalin - next primeminister candidate - rahul khandi
மு.க ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தவறு என்பதை காலம் உணர்த்தும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பிரனாய் விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆளும் மத்திய அரசை கண்டித்து பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் குறிப்பாக கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும், மேலும் குஜராத் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றிருந்தால் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பாரா? என்றவாறு பல கேள்விகளை எழுப்பினார்.
மேலும், முக்கிய நிகழ்வாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து பேசினார்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்பதை எதிர்காலம் உணர்த்தும்” என்றார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிளவுபட்ட கூட்டணி என்ற அவர் பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்று உறுதி கூறினார். ராகுல் காந்தியை அவரது கட்சியினர்கூட பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளால் போகலாம் என்றும் பாஜகவில் அனைத்து தலைவர்களும் பிரதமர் மோடியையே மீண்டும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைத்துப் ஒற்றுமையாகப் போட்டியிடுவோம் என்றும் தமிழிசை கூறினார். ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வியை வெற்றிகரமான தோல்வி என்று கூறியது பற்றி விளக்கம் அளித்த தமிழிசை, வெற்றிக்குப் பக்கத்தில் வந்து வெற்றியைப் பெறமுடியாமல் போவதைக் குறிப்பதுதான் வெற்றிகரமான தோல்வி என்று தெரிவித்தார்.