அ.தி.மு.க அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: அடிப்படை உறுப்பினராக இல்லாத ஓ.பி.எஸ் அறிவிப்பு..!
அ.தி.மு.க அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: அடிப்படை உறுப்பினாரக இல்லாத ஓ.பி.எஸ் அறிவிப்பு..!
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் 2600 க்கும் மேற்பட்ட பொதுக்குழுவினர் ஆதரவுடன் அவர் இந்த பொறுப்புக்கு தேர்வானதாக கூறப்பட்டிருந்தது.
பொதுக்குழு நடந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு பின்பும் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வரவில்லை. இதன் பின்னர் பொதுக்குழுவிற்கு எதிராக நடைபெற்ற வழக்கில் தனி நீதிபதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்புக்கு எதிரான ஈ.பி.எஸ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
இதன் பின்னர் அ.தி.மு.க தலைமையக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் அ.தி.மு.கவில் அடிப்படை உறுப்பினாரக கூட இல்லாத ஒருவர் தலைமை அலுவலக சாவி கேட்டு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளராக நியமித்துள்ளதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) அவர்கள் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.