எதிரிகளின் கனவுகளை உடைத்தெறிந்த திமுக; போட்டியின்றி உதயமாகும் அடுத்த சூரியன்
எதிரிகளின் கனவுகளை உடைத்தெறிந்த திமுக; போட்டியின்றி உதயமாகும் அடுத்த சூரியன்
திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி 50 ஆண்டுகள் அக்கட்சியை வழிநடத்தி வந்தார். கட்சி விதிப்படி தேர்தல் நடத்தித் தான் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். கருணாநிதி இறந்த பிறகு காலியாக உள்ள தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.
திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28ல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர், பொருளாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம், வேட்பு மனுவை ஸ்டாலின் அளித்தார். அவருக்கு 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர். அதற்கு முன் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஸ்டாலின் ஆசி பெற்றார். இதேபோன்று பொருளாளர் பதவிக்கான வேட்பு மனுவை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தாக்கல் செய்தார். அவரும் ஸ்டாலினுடன் கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவை போல் திமுகவில் ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தபடி இருந்தனர். அழகிரியால் கட்சியில் குழப்பங்கள் ஏற்படுமா என தினமும் செய்திகளை புரட்டிப்பார்த்தோர் பலர்.
ஆனால் இவர்கள் எண்ணங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும் வகையில் இன்று நடந்த வேட்புமனு தாக்கலில் ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் இன்று மாலை 4 மணியோடு முடிவடைந்துள்ளது. இதனால் திமுகவின் தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார்.
இந்நிலையில் செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ள ஆர்.எஸ். பாரதி, திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் தலைவராக தேர்வு செய்படுகிறார். திமுக தொடங்கியபிறகு, அதன் 2வது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என கூறியுள்ளார்.