×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொறுப்பை தட்டிக்கழிக்க என்.ஐ.ஏ-வுக்கு கதவை திறந்து விடுவதுதான் மாநில சுயாட்சியா!?: முதல்வருக்கு சீமான் கேள்வி..!

பொறுப்பை தட்டிக்கழிக்க என்.ஐ.ஏ-வுக்கு கதவை திறந்து விடுவதுதான் மாநில சுயாட்சியா!?: முதல்வருக்கு சீமான் கேள்வி..!

Advertisement

கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என்று சீமான் கூறியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல!

வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. விபத்து குறித்த காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இக்கோர நிகழ்வுக்கு மதச்சாயம் பூசுவது அப்பட்டமான மதக்காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயாகும். அவ்விபத்து நடந்தவுடன் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, உரிய ஒத்துழைப்பு வழங்கி வரும் இசுலாமிய மக்களைக் குற்றப்படுத்தும் நோக்கோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இவ்வழக்கை அவசர அவசரமாக தேசியப்புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இவ்வழக்கில் பன்னாட்டுத்தொடர்பு இருக்கும் வாய்ப்புள்ளதெனக் காரணம் கற்பிக்கும் திமுக அரசு, விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே, அத்தகைய முன்முடிவுக்கு எதன் அடிப்படையில் வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழகக் காவல்துறையிடமுள்ள வழக்கை தேசியப் புலனாய்வு முகாமையிடம் ஒப்படைப்பதன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? எதற்காக இந்த முடிவு? காவல்துறையின் மீதே மதச்சாயம் பூசி, மாநில உளவுத்துறையின் தோல்வியென குற்றஞ்சாட்டும் பாஜகவின் கூற்றை ஏற்றுக்கொண்டுதான் வழக்கை கைமாற்றிவிடுகிறதா மாநில அரசு? தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும் நிலையில், கட்டற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தேசியப் புலனாய்வு முகமையை இதுபோன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா? ஸ்டோன் சுவாமி, வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற சமூகச்செயற்பாட்டளர்கள் பீமா கொரேகான் வழக்கில் தேசியப்புலனாய்வு முகமையால் கைதுசெய்யப்பட்டுள்ளது போல, இவ்வழக்கில் அப்பாவி இசுலாமியர்களும் கைதுசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க, தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத்தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு!

ஆகவே, இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோருகிற அதேவேளையில், தேசியப் புலனாய்வு முகமையிடம் வழக்கைத் தாரைவார்த்திருப்பதற்கு எனது எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன். இத்தோடு, இக்கொடும் நிகழ்வை அடிப்படையாக வைத்து மதப்பூசலுக்கு வித்திட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க சனநாயக சக்திகள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore Blast #Cylinder Blast #seeman #NTK #NIA #NIA Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story