வரலாறு தொடர்ந்தது; இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ பாக்கிஸ்தான் அணி!
7th victory against pakistan in worldcup
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து 7வது முறை வென்று உள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 136 ரன்கள் குவித்தனர். 24 ஆவது ஓவரில் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடி 65 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 140 ரன்களிலும், ஹர்டிக் பாண்டியா 26 ரன்களிலும், தோனி ஒரு ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆட்டத்தில் 47 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டது. மழை நின்ற பிறகு தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிய போது புவனேஷ்குமார் காலில் காயம் ஏற்படவே பாதியில் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக பந்துவீச வந்த விஜய் சங்கர் முதல் பந்திலேயே இந்தியாவிற்கு முதல் விக்கெட்டை பெற்றுத் தந்தார்.
அந்த நீண்ட நேர போராட்டத்திற்கு 24 ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு இரண்டாவது விக்கெட்டை கைப்பற்றி கொடுத்தார். 48 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாம் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின.
அதனை தொடர்ந்து குல்தீப் யாதவ் வீசிய 26 ஆவது ஓவரில் சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்த பக்கர் ஜமான் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஹர்டிக் பாண்டியா வீசிய 27 ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஹபீஸ் மற்றும் சோயிப் மாலிக் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து விஜய் சங்கர் வீசிய 35 ஆவது ஓவரில் சர்பராஸ் விக்கெட்டை இழந்தார். அந்த ஓவர் முடிவிலேயே மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது பாகிஸ்தான் 35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் சிறிது நேரம் கழித்து மழை நின்றதும் ஆட்டம் 40 ஓவர்கள் இணைக்கப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இருக்கும் வரலாற்றை மீண்டும் நீட்டித்துள்ளது. நேற்றைய வெற்றி வெற்றி மூலம் இந்தியா ஏழு முறை பாகிஸ்தான் அணியை தொடர்ந்து உலககோப்பை தொடரில் வீழ்த்தியுள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை வெல்ல முடியவில்லை.