ஆசிய கோப்பை 2023: திரில் வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை..!!
ஆசிய கோப்பை 2023: திரில் வெற்றியுடன் இறுதி போட்டிக்குள் நுழைந்த இலங்கை..!!
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வென்ற இந்திய அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளப் போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் காயமடைந்த ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது வாசிம், புதுமுக வீரர் ஜமன் கான், முகமது வாசிம் இடம் பெற்றனர்.
இதன் படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபீக்-பஹர் ஜமான் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களுடனும், மற்றொரு தொடக்கவீரர் அப்துல்லா ஷபீக் 52, முகமது ஹாரிஸ் 3 ரன்னிலும், முகமது நவாஸ் 12 ரன்னிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 130 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான்-இப்திகார் அகமது ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதற்கிடையே மழையின் குறுக்கீட்டால் அரைமணி நேரம் போட்டி தடைபட்டதால் 42 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.
மீண்டும் போட்டி தொடங்கிய பின்பு, முகமது ரிஸ்வான்-இப்திகார் அகமது ஜோடி இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடியில் இப்திகார் அகமது 47 ரன்களுடனும் பின்னர் வந்த ஷதாப் கான் 3 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனை தொடர்ந்து 253 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு, நிசங்கா-குஷல் பெரோரா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. குஷல் பெரேரா 17 ரன்னிலும், நிசாங்கா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இணைந்த குஷல் மென்டிஸ்-சமர விக்ரமா ஜோடி அணியை தூக்கி நிறுத்தியது. ஸ்கோர் 177 ரன்களை எட்டிய போது சமர விக்ரமா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
36 வது ஓவரில் அணியின் ஸ்கோர் 210 ஐ எட்டிய போது குஷல் மென்டிஸ் 91 ரன்களுடன் ஆட்டமிழந்த பின்னர் அடுத்து வந்த கேப்டன் ஷனகா 2, தனஞ்செயா டிசில்வா 5, வெல்லாலகே 0 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த அணியின் ஆல்-ரவுண்டர் அலசங்கா வெற்றிக்கான ரன்களை விரட்டினார்.
இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 11வது முறையாக ஆசியகோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. அசலங்கா 49 ரன்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.