பிரபல மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு!
Ajanta mendis retires from international cricket
இலங்கை அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதாகும் அஜந்தா மெண்டிஸ் 2008 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் முதன்முதலாக களமிறங்கி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 26 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஒருநாள் போட்டிகளில் மிக விரைவாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு முறை 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் இவர் மட்டுமே.
அதோடு மட்டுமல்லாமல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டை கைப்பற்றிய ஒரே வீரர் இவர்தான். இருப்பினும் கடந்த நான்கு வருடங்களாக இவர் இலங்கை அணியில் இடம் பிடிக்கவில்லை. கேரம் பால் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி பேட்ஸ்மேன்களை பலமுறை தடுமாற செய்தவர் இவர்.
19 டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும் 87 ஒருநாள் போட்டிகளில் 152 விக்கெட்டுகளையும் 39 டி20 போட்டிகளில் 66 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். ஆரம்பத்தில் தடுமாறிய பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை கணித்து அடிக்கத் துவங்கியது இவரது இடம் கேள்விக்குறியானது கடைசியாக 2015ஆம் ஆண்டு அணிக்காக ஆடிய இவர் தற்பொழுது ஓய்வினை அறிவித்துள்ளார்.