2வது டெஸ்ட்: வேகத்தில் மிரட்டிய இஷாந்த் சர்மா! வந்த வேகத்தில் சென்ற முரளி விஜய்!
aus vs ind 2nd test update
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி மார்கஸ் ஹாரிசும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். எதிர்பார்த்தது போலவே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு மின்னல் வேகத்தில் சீறியது. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை மிகவும் துல்லியமாக எதிர்கொண்டனர்.
சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணிக்கு, ஒரு வழியாக பும்ரா முடிவு கட்டினார். அவரது பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் 50 ரன்களில் (105 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 5 ரன்னில் வீழ்ந்தார். தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸ் (70 ரன், 141 பந்து, 10 பவுண்டரி), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் (7 ரன்) வெளியேற்றப்பட்டனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து தடுமாறியது.
அதனைத்தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷான் மார்சும், டிராவிஸ் ஹெட்டும் இணைந்து அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 232 ரன்களாக உயர்ந்த போது, ஷான் மார்ஷ் (45 ரன், 98 பந்து, 6 பவுண்டரி) ஹனுமா விஹாரின் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறுமுனையில் 3-வது அரைசதத்தை பூர்த்தி செய்த டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் (80 பந்து, 6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய கேப்டன் டிம் பெய்ன் (38), கம்மின்ஸ் (19) ரன்கள் எடுத்து அணியின் எண்ணிக்கை 310 ஆக இருக்கும் பொது ஆட்டமிழந்தனர். அதனைத்தொடர்ந்து ஆட்டத்தில் 109 வது ஓவரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஸ்டார்க் மற்றும் ஹாசில்வுட் இருவரையுமே அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் முதல் இன்னிங்க்ஸை இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் துவங்கினர். ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதோடு உணவு இடைவேளை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.