இவ்வளவு சீக்கிரமாகவா.! வெறும் 13 இன்னிங்ஸ்தான்... விராட் கோலியின் பெரும் சாதனையை உடைத்த பாபர் அசாம்..!
இவ்வளவு சீக்கிரமாகவா.! வெறும் 13 இன்னிங்ஸ்தான்... விராட் கோலியின் பெரும் சாதனையை உடைத்த பாபர் அசாம்..!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து 127 ரன்னில் அவுட்டானார். பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பஹர் சமான் 11 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி 103 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து முகமது ரிஸ்வான் 59 ரன்னில் அவுட்டானார். இறுதியில், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் 103 ரன்கள் அடித்த போது பாபர் அசாம் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை விராட் கோலி வைத்திருந்தார். அவர் 17 இன்னிங்ஸ்களில் அடித்திருந்தார். ஆனால் பாபர் அசாம் வெறும் 13 இன்னிங்ஸ்களிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.