10 ஆயிரம் ரன்கள் கடந்து ஹிட்மேன் ரோஹித் சாதனை: இலங்கை அணிக்கு எதிராக புதிய மைல் கல்..!!
10 ஆயிரம் ரன்கள் கடந்து ஹிட்மேன் ரோஹித் சாதனை: இலங்கை அணிக்கு எதிராக புதிய மைல் கல்..!!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.
லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நேற்று முன்தினம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுநாளான நேற்று முடிவடைந்தது.
சூப்பர்-4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் தலா 1 வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதன் படி ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. நிதானமாகவும், உறுதியுடனும் விளையாடிவரும் இந்த ஜோடி 8 ஓவர்களின் முடிவில் 44 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் 23 ரன்கள் சேர்த்துள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 13 ஆயிரம் ரன்களை விரைவாக சேர்த்த முதல் வீரராக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.