முதல் வெற்றியை ருசித்த டெல்லி கேப்பிடல்ஸ்: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சாதனை..!!
முதல் வெற்றியை ருசித்த டெல்லி கேப்பிடல்ஸ்: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி சாதனை..!!
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 28 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு டெல்லியில் நடைபெற்ற 28 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
மழையின் காரணமாக 1 மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்-லிட்டன் தாஸ் ஜோடி களமிறங்கியது.
தொடக்கம் முதலே தடுமாறிய கொல்கத்தா அணியில் லிட்டன் தாஸ் (4 ), வெங்கடேஷ் அய்யர் (0), கேப்டன் நிதிஷ் ராணா (4 ), ரின்கு சிங் (6) ரன்களில் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாடிய ஜேசன் ராய் (43) ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வரிசையில் களமிறங்கிய ஆந்த்ரே ரஸல் (38) தனி ஒருவனாக போராடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.
கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் 128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர்-பிரித்திவி ஷா ஜோடி களமிறங்கியது. வார்னர் ஒரு முனையில் அதிரடி காட்ட, மறுமுனையில் பிரித்திவி ஷா (13), மிட்செல் மார்ஷ் (2), பில் சால்ட் (5) ரன்களில் நடையை கட்டினர்.
நம்பிக்கையுடன் போராடிய வார்னர் அரைசதம் விளாசி அசத்தினார். ஐ.பி.எல் போட்டிகளில் 59 வது அரைசதமாக பதிவானது. முக்கிய கட்டத்தில் டேவிட் வார்னர் (57) ரன்களுடன் ஆட்டம் இழக்க போட்டியில் பரபரப்பு தொற்றியது. இந்த நிலையில் களமிறங்கிய அக்ஸர் படேல் பொறுப்புடன் விளையாட மீண்டும் அந்த அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.
கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்ட அக்ஸர் படேல் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்ததால் 19.2 ஓவர்களில் டெல்லி அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.