பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய டெல்லி கேப்பிடல்ஸ்..!! படாத பாடுபட்டு புள்ளி பட்டியலில் முன்னேற்றம்..!!
பஞ்சாப் அணியை பஞ்சராக்கிய டெல்லி கேப்பிடல்ஸ்..!! படாத பாடுபட்டு புள்ளி பட்டியலில் முன்னேறியது..!!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 64 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற 64 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இந்த போட்டியில் கட்டாயம் வென்றேயாக வேண்டிய நிலையில் பஞ்சாப் அணி களமிறங்கியது. அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட டெல்லி அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் வேட்கையுடன் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர்-பிரித்வி ஷா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது.
இந்த போட்டியில் டேவிட் வார்னர் தொடக்கம் முதலே அதிரடி காட்ட, முதலில் தடுமாறிய பிரித்வி ஷா நிலைத்து நின்ற பின்னர் அதிரடிக்கு திரும்பினார். இதன் காரணமாக டெல்லி அணியின் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. தொடக்க விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், டேவிட் வார்னர் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ரைலி ரூசோவ் சரவெடியாய் வெடிக்க பந்துகள் நாலாபுறமும் பறந்தது. இதற்கிடையே அரைசதம் கடந்த பிரித்வி ஷா 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பில் சால்ட் உடன் இணைந்த ரூசோவ் வாண வேடிக்கை காட்ட டெல்லி அணியின் ஸ்கோர் 200 ஐ நோக்கி பயணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. ரூசோவ் 37 பந்துகளில் 82 ரன்களும், பில் சால்ட் 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 214 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங்-ஷிகர் தவான் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஜோடியில் தவான் முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட் ஆகி வெளியேறினார். பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, லியாம் லிவிங்ஸ்டனுடன் இணைந்த அதர்வா நிதானமாகவும் பொறுப்புடனும் விளையாடி அரைசதத்தைக் கடந்தார்.
மறுமுனையில் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன்48 பந்துகளை சந்தித்து, 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை விளாசி 94 ரன்கள் குவித்தார். முக்கிய கட்டத்தில் அதர்வா ஆட்டமிழக்க பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி அணி 9வது இடத்திற்கு முன்னேறியது.