பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய தோனி, கேஎல். ராகுல்! தடுமாறும் பங்களாதேஷ்
dhoni and kl rahul made century in warmup match
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் வேளையில் அணைத்து அணிகளும் இங்கிலாந்து சென்று பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்திடம் தோல்வியை தழுவியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் தவான்(1) மற்றும் ரோஹித் சர்மா(19) இருவரும் தடுமாறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு கே எல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கோலி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து விஜய் ஷங்கர் 2 ரன்னில் ஆட்டமிழக்க கே எல் ராகுலுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள்.
பின்னர் கே எல் ராகுல் மற்றும் தோனி இருவரும் நிதானமாக ஆடி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திசை திருப்பினர். அதேசமயம் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கவும் செய்தனர். நான்காவது இடத்தில் இறங்கி சிறப்பாக ஆடிய ராகுல் சதமடித்து 108 எடுத்து 44 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 266.
அதனை தொடர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்த தோனி 78 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி 8 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது.
இமாலய இலக்கை எட்டும் நோக்கில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 22 ஓவர் முடிவில் 108 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.