கொரோனா அச்சுறுத்தல்: மைதானத்தில் ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்க தடை!
Fans not allowed for match
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட 104 நாடுகளில் பரவியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரானா பாதித்தவர்களில் அதிகப்படியாக கேரளாவில் 12 பேரும், அதற்கடுத்து உத்தரபிரதேசத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து நடக்கும் லக்னோ, கொல்கத்தா ஒருநாள் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போட்டி நடைபெறும் கொல்கத்தா, லக்னோ விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக தர்மசலாவில் இன்று நடைபெற இருந்த இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் ஆட்டம் டாஸ்கூட போடாமல் ரத்து செய்யப்பட்து.
கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், அதிகமாகக் மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, விளையாட்டுப் போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம், பங்கேற்கும் வீரர்கள் மட்டும் களத்தில் இருக்கட்டும் . தேவைப்பட்டால் போட்டிகளை ஒத்திவைக்கவோ, ரத்துசெய்யலாம் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு அகாடெமி, பிசிசிஐ ஆகியவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில், வரும் 15-ம் தேதி லக்னோவில் நடக்கவிருக்கும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம், 18-ம் தேதி நடக்கும் எனவும், 3-வது போட்டி ஆகியவற்றில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.