சவுரவ் கங்குலியின் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று! தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி!
gangly brother affected by corona
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேகாசிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க இணைசெயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஸ்னேகாசிஷ் கங்குலிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததை அடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிசெய்யப்பட்டது.
இந்தநிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்க கங்குலி வீடு அமைந்து இருக்கும் பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கங்குலி தனது வீட்டின் அருகில் உள்ள அலுவலகத்தில் வைத்து தான் கிரிக்கெட் வாரிய பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தனது சகோதரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கங்குலி வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இதேபோல் அவருடன் தொடர்பில் இருந்த கிரிக்கெட் சங்க தலைவர் அவிஷேக் டால்மியாவும் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனோ காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான ஐபிஎல் லீக் போட்டிகளை எப்படி நடத்துவது, 20 -20 உலகக்கோப்பை போன்ற முக்கிய ஆலோசனைகளில் பங்கேற்றுக்கொண்டிருந்த சூழலில் சவுரவ் கங்குலி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களையும், கங்குலியின் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.