கேள்விக்குறியாகும் தோனியின் எதிர்காலம்! கங்குலி பரபரப்பு பேச்சு
ganguly talks about dhoni's future
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த மாதம் துவங்கும் இந்த தொடருக்கான டி20 அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகளுக்கான இந்திய வீரர்களையும் பிசிசிஐ சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தோனி இவ்வாறு நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளும் ஆதரவுகளும் என மாறி மாறி பெருகி வருகின்றன. இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், 'தோனியை டி20 அணியில் இருந்து நீக்கியது எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. கடந்த சில நாட்களாக அவருடைய பேட்டிங் திறன் சரியாக இல்லை. 2020 டி20 உலகக்கோப்பை வரை தோனி ஆடுவதும் சந்தேகமே. அதனால் தான் நல்ல பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
தேர்வாளர்கள் தோனியை 2019 உலகக்கோப்பை வரை அணியில் வைத்திருக்கப் போகிறார்கள் என்றால் அவருக்கு தேவையான போட்டிகளை வழங்க வேண்டும். அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் உள்ளூர் போட்டிகளில் ஆடப்போவதில்லை. நேராக அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசீலாந்து தொடரில் தான் ஆடுவார். கிரிக்கெட்டில் இது பெரிய இடைவெளி.
தேர்வாளர்கள் தோனியை ரஞ்சி அணியில் ஆட வைக்க அவரிடம் பரிந்துரைக்க வேண்டும். அப்போது தான் அவர் கிரிக்கெட்டோடு தொடர்பில் இருப்பார். மேலும், தன் பார்மையும் மீட்டுக் கொள்வார். நீங்கள் என்ன தான் பெரிய வீரராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து ஆடாவிட்டால் உங்கள் தொடர்பு விட்டுப் போய் விடும்" என்று தோனிக்கு அறிவுரை வழங்கும் வகையில் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.
கங்குலியின் இத்தகைய எச்சரிக்கையால் தோனி ஆஸ்திரேலிய தொடரில் சரியாக ஆடாத பட்சத்தில் இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியாக அமைந்து விடும் என்பது உறுதியாக தெரிகிறது.