உங்கள பார்த்தால் சச்சின் - சேவாக் கூட்டணி மாதிரியே இருக்கு..! புகழ்ந்துதள்ளிய முன்னாள் வீரர்கள்..
ரோஹித் - விராட்கோலியின் ஓப்பனிங் குறித்து ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள்வரை பலரும் பாரா
ரோஹித் - விராட்கோலியின் ஓப்பனிங் குறித்து ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள்வரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 வது T20 போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் 2 - 2 என்று சமநிலையில் இருந்ததால் நேற்றைய போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து இந்திய அணி வீரர்கள் ரோஹித் ஷர்மாவும் அணியின் கேப்டன் விராட்கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இஷான் கிஷான், ஷிகர் தவான், கே எல் ராகுல் மற்றும் ரோஹித் ஆகியோர் மாறி மாறி, தொடக்க வீரர்களாக இந்திய அணிக்கு களமிறங்கி வந்த நிலையில், நேற்றைய போட்டியில் ரோஹித்தை தவிர மற்ற மூன்று பேரும் ஆடவில்லை.
இதனால் கேப்டன் கோலி தொடக்க வீரராக இறங்கினார். ரோஹித் - விராட்கோலி இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கியதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அந்த உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இருவரும் மாறி, மாறி பந்துகளை சிதறடித்தனர்.
ஒருகட்டத்தில் ரோஹித் ஷர்மா 64 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார், பின்னர் சூர்யகுமார் யதாவுடன் ஜோடி சேர்ந்த விராட்கோலி மீண்டும் அதிரடியாக விளையாடி, கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 80 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் அடித்தது. அதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் மட்டுமே அடித்து இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ரோஹித் - விராட்கோலி இருவரும் ஓப்பனிங் இறங்கியதை பார்க்கும்போது சச்சின், சேவாக் இணையை பார்ப்பது போல உள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
அதே போல, சேவாக், வாசிம் ஜாஃபர், லக்ஷ்மண் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் இந்த இணையை பாராட்டி வருகின்றனர்.