யார் இந்த மயங்க் அகர்வால்? திடீரென இந்திய அணியில் இடம்பிடிக்க என்ன காரணம்!
How mayank agarwal replaced vijayshankar
உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக இதுவரை பல்வேறு ஒருநாள் தொடர்களில் ஆடியுள்ள ரகானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் இருக்கும் பட்சத்தில் இதுவரை ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் கூட ஆடாத மயங் அகர்வாலை அணியில் சேர்க்க என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மயங்க் அகர்வால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்தவர். அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். மேலும் கர்நாடக ரஞ்சி கோப்பையில் ஆடியுள்ள இவர் ஒரு முறை 300 ரன் எடுத்துள்ளார்.
இவர் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது ப்ரீத்திவ் ஷாவிற்கு காயம் ஏற்பட்டதால் இவர் துவக்க ஆட்டக்காரராக அணியில் இடம் பிடித்தார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இவர் இரண்டு அரை சதங்கள் அடித்து அந்த தொடரில் 195 ரன்கள் எடுத்தார்.
2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இவர் 332 ரன்கள் குவித்தார். 28 வயதான மயங்க் அகர்வால் ஒரு சிறந்த துவக்க ஆட்டக்காரராக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். இதன் காரணமாகவே இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக உலகக்கோப்பையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.