கிரிக்கெட் வீரர்கள் இனி இப்படிதான் நடந்துகொள்ள வேண்டும்! ஐசிசி வெளியிட்ட புதிய விதிகள்!
Icc guidelines for players who play cricket
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கால் ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஒரு தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் போட்டிக்கு முன்பு கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். மேலும் அப்போது அவர்களுக்கு உடல் வெப்ப நிலை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு அணியிலும் தலைமை மருத்துவ அதிகாரி அல்லது உயிர் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
விளையாட்டு வீரர்கள் தங்களது தொப்பிகள், துண்டுகள் மற்றும் சன்கிளாஸ் போன்ற பொருட்களை நடுவரிடமோ அல்லது சக வீரர்களிடமோ கொடுக்க அனுமதி கிடையாது. அவர்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீரர்கள் அனைவரும் ஒவ்வொரு ஓவர்களுக்கு இடையே சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
மேலும் வீரர்கள் கிரிக்கெட் பந்துகளை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது . கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்கள் களத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும். பயிற்சியின்போது வீரர்கள் இடையே ஓய்விற்காக வெளியே செல்ல அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.