ஆசிய கோப்பை 2023: மோசமான சாதனை படைத்த இந்தியா..!! இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை..!!
ஆசிய கோப்பை 2023: மோசமான சாதனை படைத்த இந்தியா..!! இந்திய கிரிக்கெட் வரலார்றில் இதுவே முதல் முறை..!!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சில் பறிகொடுத்த மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர்-4 சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன் படி ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. சிறப்பான தொடக்கம் அளித்த தொடக்க ஜோடி 80 ரன்கள் சேர்த்த பின்பு பிரிந்தது. முதலில் சுப்மன் கில் 19 (25), விராட் கோலி 3 (12), ரோஹித் சர்மா 53 (48) ஆகியோர் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் புதுமுக சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் இணைந்த கே.எல்.ராகுல்-இஷான் கிஷன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. மீண்டும் வெல்லாலகே பந்துவீச்சில் 39 ரன்கள் சேர்த்திருந்த கே.எல்.ராகுல் சிக்கினார். பின்னர் சீரான இடைவெளியில் இஷான் கிஷன் 33, ஹர்டிக் பாண்டியா 5, ரவீந்திர ஜடேஜா 4, பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தது. இறுதி கட்டத்தில் அதிரடிகாட்டிய அக்ஸர் பட்டேல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 10 விக்கெட்டுகளையும் சுழற் பந்துவீச்சாளர்களிடம் இழந்தது இதுவே முதன்முறையாகும்.