4 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் பரம எதிரிகள்: எகிறும் எதிர்பார்ப்பு..!
4 ஆண்டுகளுக்கு பிறகு மோதும் பரம எதிரிகள்: எகிறும் எதிர்பார்ப்பு..!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3 வது லீக் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும்.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை அடித்து நொறுக்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2 வது லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் தொடரின் 3 வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள பல்லகலே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு 4 ஆண்டுகள் கழித்து இரு அணிகளும் முதல் முறையாக சந்திப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பல்லகலே மைதானத்தில் இந்திய அணி இதுவரை பங்கேற்றுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் பங்கேற்று 2 வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் பின் வருமாறு:-
இந்தியா:- ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:- பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சல்மான், இப்திகார் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷாகீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.