"அதற்குள் ஏன் கொதிக்கிறீர்கள்; இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன" கொதித்தெழுந்த கங்குலி!
India can win next 2 tests against australia ganguly
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதனால் 1-1 என்று தொடர் சமநிலையில் உள்ளது.
ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை மிகவும் எளிதாக இந்திய அணி வென்றுவிடும் என அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி அமைந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் ஆடும் 11 வீரர்களை தேர்ந்தெடுக்கும் விதம் தான் என பலர் விமர்சித்து வருகின்றனர்.
இரண்டாவது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். ஆனால் இந்திய அணியின் சார்பில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் கூட இறக்கப்படவில்லை. வெறும் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கிய கோலிக்கு இது மிகப்பெரும் அடியாய் அமைந்துவிட்டது. இதுவே அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைக்க காரணமாயிற்று.
மேலும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் கோலிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினுக்கும் இடையே இரண்டு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இதுவும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை முன்னிட்டு ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணியை கேலி செய்யும் விதமாக பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிராக எழுந்து வரும் இந்த விமர்சனங்களை எல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொங்கி எழுந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, "இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, குறிப்பாக ஆஸ்திரேலியா ஊடகங்களில். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருப்பதை மறந்து விடாதீர்கள். அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியால் நிச்சயம் வெல்ல முடியும். ஒருவரைப்பற்றி அவ்வளவு எளிதாக விமர்சித்து விடாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி, கோலி தலைமையிலான இந்திய அணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கங்குலி, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையை இந்திய அணியால் நிச்சயம் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.