3rd Test: இந்திய அணி மிரட்டல் பந்துவீச்சு! பாலோ ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
India is string in 3rd test
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. எனவே இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 435 ரன்கள் பின் தங்கியுள்ளது. மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்களுடனும், பின்ச் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கின.
பின்ச் 8, ஹாரிஸ் 22, கவாஜா 21, ஷான் மார்ஷ் 19, ஹெட் 20, மிச்சல் மார்ஷ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 100 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி நேர நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டு உள்ளது. அந்த அணியின் கேப்டன் பெயின் இரண்டு ரன்களிலும் கம்மின்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆடி வருகின்றனர்.
இந்திய அணியின் சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலிய அணி 339 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி பாலோ ஆனை தவிர்க்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.