மரண அடி!! இரண்டே ரன்களில் இந்தியாவின் கதையை முடித்த இங்கிலாந்து;
India lost 3 wickets for 2 runs
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட போட்டியில் 464 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்தது இங்கிலாந்து.
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழப்புக்கு 423 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் பெற்ற 40 ரன்கள் முன்னிலை சேர்ந்து 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை இந்தியாவிற்கு நிர்ணயித்தது.
இந்த இமாலய இலக்கை எட்ட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்துவிட்டது.
தொடக்க ஆட்டக்காரர் தவான் ஆண்டர்சன் வீசிய மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் எடுத்த ரன் ஒன்று அணியின் எண்ணிக்கையம் ஒன்று. பின்னர் வந்த புஜாரா, அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்தியா ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கட்டுகளை இழந்தது.
பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி நிலைத்து ஆடுவர் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் ஏமாற்றம் அளித்தார். கோலி, ப்ராடு வீசிய நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக இந்தியா இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கட்டுகளை இழந்தது.
இந்த தொடரில் இந்தியா சார்பில் சதமடித்த இரண்டு பேட்ஸ்மென்களும் டக் அவுட் ஆனது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பின்னர் களமிறங்கிய ரஹானே ராகுலுடன் ஜோடி சேர்ந்து இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர். 15 ஓவர் முடிவில் இந்தியா 49 ரன்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து ஆடி வருகிறது.