ஒட்டு மொத்த அணியுமே ஒருங்கிணைந்து செய்த உழைப்பால் கிடைத்த பலன்.! 5-வது முறையாக U-19 உலக கோப்பையை வென்றது இந்தியா.!
ஒட்டு மொத்த அணியுமே ஒருங்கிணைந்து செய்த உழைப்பால் கிடைத்த பலன்.! 5-வது முறையாக U-19 உலக கோப்பையை வென்றது இந்தியா.!
இங்கிலாந்துக்கு எதிரான ஜூனியர் உலக கோப்பை(ICC U19 உலகக்கோப்பை) இறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஐசிசி U19 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
ICC U19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரகுவன்ஷி ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர். 11-வது ஓவரில் ஹர்னூர் சிங் 21 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். ரஷீத் மற்றும் கேப்டன் யாஸ் துல் இணைந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினர்.
50 ரன்கள் எடுத்தபோது ரஷீத் அவுட்டானார். இதனையடுத்து கேப்டன் யாஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய நிஷாந்த் சிந்துவும், ராஜ் பாவாவும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர். நிஷாந்த் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு போராடினார். இறுதியில் இந்திய அணி 47.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 4 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், இந்த வெற்றியால் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.