3rdT20: தவான், கோலி அதிரடி! அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்திய அணி
India won 3rd t20 and equals series
சிட்னி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதிய மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.
முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இரண்டாவது போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சாட் மற்றும் பின்ச் சிறப்பான துவக்கத்தினை அளித்தனர். 8 ஓவர்கள் ஆடிய இந்த முதல் விக்கெட் ஜோடி 68 ரன்கள் எடுத்தது.
பின்ச் 28, சாட் 33 ரன்கள் எடுத்து குலதீப் யாதவ் மற்றும் குருனால் பாண்டியா ஓவர்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பத்தாவது ஓவரை வீசிய குருனால் பாண்டியா சார்ட் மற்றும் மெக்டார்மெட் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ரன் விகிதம் குறைய துவங்கியது.
மேக்ஸ்வெல் 13, கேரி 27, லின் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டாய்னிஸ் 25 ரன்களும் கவுண்டர் நைல் 13 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் குருனால் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய தவான் ஆறாவது ஓவரில் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 41 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் அடுத்த ஓவரிலேயே ரோகித் சர்மா 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் எண்ணிக்கை 67.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மறுமுனையில் தடுமாறிய ராகுல் 20 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த பண்ட் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.
கடைசி 4 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. சிறிதும் நம்பிக்கை இழக்காத கேப்டன் கோலி தனது வழக்கமான அதிரடியை துவங்கினார். அதிரடியாக ஆடிய கோலி 34 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து ஆடிய கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். 19.4 ஓவர்களில் இந்திய அணி 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்களும் தினேஷ் கார்த்திக் 22 ரன்களும் எடுத்தனர்.