150 ஆவது வெற்றி! மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி
India won in 3rd test
மெல்போர்னில் நடந்த 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. கடைசி நாளான இன்று மழையின் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் கடைசி நாளான இன்று இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்று இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
மூன்றாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்களுக்கு எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா 106 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அதிகமான ரன்கள் எடுத்து இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயிக்கலாம் என்ற எண்ணம் தவிடுபொடியானது.
பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. ஆஸி. அணியின் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், லியான் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கடைசி நாள் ஆட்டமான இன்று மழையின் காரணமாக தாமதமாக துவங்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கம்மின்ஸ் 63 ரன்னிலும், லியான் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2-1 என்ற தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியின் சார்பில் பும்ரா, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தி அவரதுய அணி டெஸ்ட் வரலாற்றில் 150ஆவது வெற்றியை பெற்றுள்ளது.