ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது இந்தியா.! கெத்து காட்டிய இந்திய அணியின் இளம் வீரர்கள்.!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அடிலெய்டு தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.
2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், ஆர்.அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தநிலையில் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தநிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.