காமெடி அம்பயர்கள்! பந்தை பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டு மைதானம் முழுவதும் தேடிய கொடுமை.!
ipl2019 - rcb vs kxip - umpers - ball escape
ஐபிஎல் 12ஆவது சீசன் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நேற்று நடைபெற்ற 42 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வின் செய்த பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதன்படி பெங்களூர் அணிக்காக களம் இறங்கிய பார்த்திவ் படேல் 24 பந்துகளில் 43 ரன்கள், ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகளில் 82 ரன்கள், மார்க் ஸ்டானிஸ் 34 பந்துகளில் 46 ரன்களை அதிகபட்சமாக எடுத்ததன் மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் வீரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக ரன்களை குவித்து தொடங்கினர். இதனால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் மிகவும் போராடி பஞ்சாப் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி வீரர்களான கேஎல் ராகுல் 27 பந்துகளில் 42 ரன்களையும் நிக்கோலாஸ் பூரான் 28 பந்துகளில் 46 ரன்களையும் குவித்தனர்.
முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 14 ஓவரில் ‘டைம் அவுட்’ இடைவேளை அறிவிக்கப்பட்டது. அதன்படி இடைவேளையின் போது பந்தை வீரர்களிடம் பெற்ற அம்பயர், தன் பாக்கெட்டுக்குள் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
அதன் பின் இடைவேளைக்குபின் பவுலர் பந்துவீச வந்தபோது பந்தை கேட்க, பந்தை காணாமல் வீரர்கள் தேடினர். அம்பயரும் பந்தை வைத்த இடத்தை மறந்து தேடிக்கொண்டே இருந்தார். அதற்குள் மற்றொரு பந்தை பெவிலியனில் இருந்த நான்காவது அம்பயர் கொண்டு வந்தார். பின் சுதாரித்த கள அம்பயர் பாக்கெட்டில் இருந்த பந்தை எடுத்து பவுலரிடம் கொடுத்தார்.