கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன்! ஆதரவளித்த ரசிகர்களுக்கு ஜடேஜா உருக்கமான நன்றி
Jadeja love and thanks to fans
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தவித்த அணிக்கு கடைசிவரை நம்பிக்கை கொடுத்தவர் ரவீந்திர ஜடேஜா.
உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜாவிற்கு கடைசி லீக் போட்டியில் தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அரையிறுதியிலும் இடம் பெற்றார் ஜடேஜா. 92 ரன்களில் ஆறு முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்து தவித்த இந்திய அணிக்கு தோனியுடன் சேர்ந்து வெற்றிக்கான நம்பிக்கையை கொடுத்தார் ஜடேஜா.
அதிரடியாக ஆடிய ஜடேஜாவின் ஆட்டத்தை கண்டு நியூசிலாந்து அணியும் நடுங்கியது. இவர் கடைசிவரை நின்றாள் இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் 48 ஆவது ஓவரில் அவுட் ஆகவே இந்திய அணி தோல்வியை நோக்கி பயணித்தது.
முக்கியமான தருணத்தில் 77 ரன்கள் எடுத்து தனது பாட்டின் மூலம் திறமையை நிரூபித்த ஜடேஜா தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு டிவிட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில், " ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்பும் மீண்டும் எழுந்து வரும் சக்தியை விளையாட்டு எனக்கு கொடுத்துள்ளது.
எனக்கு ஊக்கம் அளித்த ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தனித்தனியாக நன்றி செலுத்த முடியாது என்றாலும் இந்த இடத்தில் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஊக்கம் அளித்து கொண்டே இருங்கள் என் கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன்” என பதிவிட்டுள்ளார் ஜடேஜா.