மீண்டும் கோலி, ஸ்ரேயஸ் அசத்தலான ஆட்டம்! தொடரை கைப்பற்றியது இந்தியா
Kholi and sreyas played and won the series
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மழை குறுக்கிடவே சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் ஆட்டம் துவங்கியது. கெய்ல் மற்றும் லீவிஸ் அதிரடியாக ஆடினர்.
41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த கெய்ல் மற்றும் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த லீவிசும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஆட்டத்தின் 22 ஆவது ஓவர் முடிவில் மீண்டும் மழை குறுக்கிடவே ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 35 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணிக்கு டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 255 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 10 ரன்னிலும் தவான் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நாண்காவதாக களமிறங்கிய பண்ட் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆட துவங்கினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஸ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து 29 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதமடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் விளாசினார். கேதர் ஜாதவ் 19 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 32.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேலும் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்ட மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பெற்றார்.