தந்தை இறப்பதற்கு 2 நாள் முன்னாடி கடைசியா என்ன பேசினார்!! உருக்கத்துடன் க்ருணால் பாண்டியா பகிர்ந்த விஷயம்..
தனது தந்தை இறப்பதற்கு முன் அவரிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்து உணர்வுபூர்வமாக பேசி
தனது தந்தை இறப்பதற்கு முன் அவரிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்து உணர்வுபூர்வமாக பேசியுள்ளார் க்ருணால் பாண்டியா.
மும்பை அணிக்காக விளையாட இருக்கும் க்ருணால் பாண்டியா, சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
அப்போது பேட்டியின் இடையே க்ருணால் பாண்டியா, பேச முடியாமல் தனது தந்தையை நினைத்து கண்ணீர் சிந்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் வைரலானது. இந்நிலையில் தனது மறைந்த தந்தை குறித்து உருக்கமான தகவல்களை வெளியிட்டுள்ளார் க்ருணால் பாண்டியா.
எனது தந்தை இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, நான் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடிக்கொண்டிருந்தேன். அந்த போட்டியில் நான் ஆடியதை பார்த்து விட்டு, என் தந்தை என்னை அழைத்து பேசினார். நீ பேட்டிங் செய்வதை பார்த்தேன். 6 வயதில் இருந்தே நீ பேட்டிங் செய்வதை நான் பார்த்துவருகிறேன்.
ஆனால் இப்போது ஒன்றை நான் சொல்கிறேன். உனக்கான நேரம் இனிதான் வரப்போகிறது என கூறினார். முதலில் அவர் கூறியது எனக்கு வேடிக்கையாக தெரிந்தது. இதற்கு பதிலளித்த நான், அப்பா.. நான் கடந்த 5 ஆண்டுகளாக விளையாடிவருகிறேன். ஐபில், இந்திய அணியில் கூட இடம் பிடித்துவிட்டேன், ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றி விட்டோம். இதற்கு மேல் என்ன இருக்கிறது? என நான் அவரிடம் கூறினேன்.
ஆனால் அவரோ, இல்லை இல்லை. இதுவரை நீ செய்தது எல்லாமே சிறந்ததுதான். ஆனால் உனக்கான நேரம் இனிமேல் தான் வரப் போகிறது என்பதை நான் உணர்கிறேன் என மீண்டும் கூறினார். அதுதான் நான் எனது தந்தையிடம் கடைசியாக பேசியது. அடுத்த 2 நாட்களில் அவர் உயிரிழந்துவிட்டார்.
அவர் இறந்து 2 மாதங்களுக்கு மேலாகியும்கூட, அவர் இன்று வரை என்னுடன் இருப்பதாகவே நான் உணர்கிறேன். நான் எனது சகோதரர் ஹர்திக் மற்றும் எனது குடும்பத்தினர் ஆகியோருக்கு கிடைத்த வாழ்க்கைக்கு பின்னால் இருப்பது எனது தந்தையின் கடின உழைப்பும், போராட்டங்களும், தியாகங்களுமே ஆகும். அவர் விதைத்த மரத்தில் மலர்ந்தவர்கள் தான் நானும், ஹர்திக் பாண்டியாவும். என உருக்கமாக பேசியுள்ளார் க்ருணால் பாண்டியா.