நேற்றைய ஆட்டத்தில் சுப்மான் கில்லுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்.! கடுப்பான தல தோனி.!
நேற்றைய ஆட்டத்தில் சுப்மான் கில்லுக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்.! கடுப்பான தல தோனி.!
ஐ.பி.எல். 2021 தொடரின் இறுதிப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுபிளிசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தின்போது கொல்கத்தா அணி வீரர் சுப்மான் கில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜாவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது அம்பத்தி ராயுடுவிடம் கேட்ச் ஆனார். ஆனால் பந்து அந்தரத்தில் பறந்த ஸ்பைடர் கேமராவின் வயரில் பட்டு கீழே இறங்கியது. விதிமுறைப்படி அந்த பந்து செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சுப்மான் கில் தொடர்ந்து விளையாடும் அதிர்ஷ்டத்தை பெற்றார். இந்த முடிவால் கேப்டன் தோனி கடும் அதிருப்திக்குள்ளானார். இதனையடுத்து சிறப்பாக ஆடிய சுப்மான் கில் 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.