ஐதராபாத்தின் வெற்றியை பறித்த நிக்கோலஸ் பூரன்..!! அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த லக்னோ..!!
ஐதராபாத்தின் வெற்றியை பறித்த நிக்கோலஸ் பூரன்..!! அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்த லக்னோ..!!
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 58 வது லீக் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு அல்மோன்பிரீத் சிங்-அபிஷேக் ஷர்மா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்தில் அபிஷேக் ஷர்மா 7, அடுத்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும் வெளியேறினர்.
பின்னர் வந்த மார்க்ராம் நிதானம் காட்ட, சிறப்பான தொடக்கம் அளித்த அல்மோன்பிரீத் சிங் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மார்க்ராம் 28, கிளென் பிலிப்ஸ் டக்-அவுட்டிலும் வெளியேறியதால் அந்த அணி சரிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஹென்ரி கிளாசன் , அப்துல் சமத் இணைந்து லக்னோ பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசியதால் ரன் ரேட் வேகமாக எகிறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாஸன் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் அப்துல் சமத் 37 ரன்கள் எடுத்தார் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி தரப்பில் குருணால் பாண்டியா 2, அமித் மிஸ்ரா, ஆவேஷ்கான், யாஷ் தாக்கூர், யுத்விர் சிங் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 183 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கைல் மேயர்ஸ்-குயின்டன் டீகாக் ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தடுமாற்றத்துடன் தொடங்கிய கைல் மேயர்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய மான்கட், டீகாக்குடன் இணைந்து அதிரடியாக தொடங்கினார்.
ஓரளவு சிறப்பாக ஆடிய குயின்டன் டீகாக் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மார்க் ஸ்டோய்னிஸ் மான்கட்டுடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். பின்னர் அதிரடிக்கு திரும்பிய ஸ்டோய்னிஸ் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியடித்து 40 ரன்கள் சேர்த்து முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
மொத்தம் 13 பந்துகளை சந்தித்த பூரன் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இக்கட்டான நிலையில் களமிறங்கி பொறுப்புடன் ஆடிய மான்கட் 64 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 19.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்த லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகள் பெற்ற அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது.