நாளை போட்டிகள் இரண்டு; ஆனால் முடிவு ஒன்று தான்! அப்படி என்ன முக்கியமான முடிவு தெரியுமா?
matches 2 but result is one
கடந்த மே மாதம் இறுதியில் இங்கிலாந்தில் துவங்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. ஆனால் அரையிறுதிக்குள் நுழையும் நான்கு அணிகளும் ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நுழைந்துவிட்டன. தற்போதைய நிலவரப்படி மூன்றாவது இடத்தை இங்கிலாந்தும் நான்காவது இடத்தை நியூசிலாந்து தக்கவைத்துள்ளது இதில் இனி எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை. ஆனால் முதல் இரண்டு இடங்களை தீர்மானிப்பதற்கான முக்கியமான இரண்டு போட்டிகள் நாளை தான் நடைபெற உள்ளது.
புள்ளிப் பட்டியலில் தற்போதைய நிலவரப்படி 7 ஆட்டங்களில் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் 6 ஆட்டங்களில் வென்றும் ஒரு ஆட்டம் மழையால் தடைபட்டதால் 13 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு அணிகளில் கடைசியில் எந்த அணி முதலிடத்தையும் இரண்டாம் இடத்தையும் பிடிக்கும் என்பது நாளை நடைபெறும் கடைசி இரண்டு லீக் போட்டிகளின் முடிவில் தான் தெரியவரும். அதனைப் பொறுத்து தான் எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதும் என்ற முடிவும் கிடைக்கும்.
நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் இந்திய அணி இலங்கையையும் இரண்டாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டுமே வென்றால் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்று இந்தியா வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு முதல் இடம் கிடைக்கும்.