ஒட்டு மொத்த சாதனைக்கும் வேட்டு வைத்த முகமது சிராஜ்: ஒரே போட்டியில் பணால் பணால்..!!
ஒட்டு மொத்த சாதனைக்கும் வேட்டு வைத்த முகமது சிராஜ்: ஒரே போட்டியில் பணால் பணால்..!!
ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றியன் மூலம் முகமது சிராஜ் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதன் படி அந்த அணியின் தொடக்க ஜோடி பதும் நிசங்கா-குஷால் பெரோரா ஜோடி களமிறங்கியது. தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரிட் பும்ரா 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 4 வது ஓவரை வீசிய முகமது சிராஜ், பதும் நிசங்கா (2), சமர விக்ரமா (0), அசலங்கா (0) மற்றும் தனஞ்செயா டிசில்வா (4) ஆகியோரை வெளியேற்றி இலங்கை அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
மேலும் 6 வது ஓவரில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகாவை (0) கிளீன் போல்டாக்கி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். இதன் மூலம் 16 பந்துகளை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் அபார சாதனை படைத்தார். மீண்டும் 12 வது ஓவரை வீசிய சிராஜ், குஷால் மென்டிசை 17 ரன்களுக்கு வெளியேற்றினார். இது அவருக்கு 6வது விக்கெட்டாக பதிவானது. மேலும் ஆசிய கோப்பையில் சிறந்த பந்துவீச்சாகவும் இது பதிவானது.
இதன் பின்னர் 13 வது ஓவரை வீசிய ஹர்டிக் பாண்டியா வெல்லாலகேவை 8 ரன்களுக்கும், 16 வது ஓவரில் மதுஷனை 1 ரன்னிலும், அடுத்த பந்தில் மதீஷா பத்திரானாவை டக்-அவுட்டிலும் வெளியேற்றினார். இதன் காரணமாக இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பவர்-பிளே ஓவர்களில் 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் முகமது சிராஜ் படைத்துள்ளார். இதுவரை வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் பவர்-பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை. இதற்கு முன்பு இந்தியாவின் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோர் பவர்-பிளே ஓவர்களில் 4 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் மக்காயா நிடினி பாகிஸ்தானுக்கு எதிராக 8 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் கைப்பற்றி இருந்த சாதனையை முகமது சிராஜ் தகர்த்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் 7 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமன்றி 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் 10 ஓவர்களில் மிகக் குறைந்த ஆவரேஜ் கொண்டவராக (16.16 )முகமது சிராஜ் உள்ளார். ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் 19.47, மேட் ஹென்றி 20.11, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 20.62 ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.