தோனியின் வெறித்தனமான ரசிகன் செய்த செயல்.! தனது வீட்டையே முழுவதும் மாற்றிய சிஎஸ்கே ரசிகன்.!
தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டில் மஞ்சள் பெய்ன்ட் அடித்து தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் இருந்தனர்.
ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் நெஞ்சை நிமிர்த்து சிங்கம்போல் ஆடுகளத்தில் கர்ஜித்து அனைத்து வீரர்களும் பந்துகளை பறக்க விடுவார்கள். அந்தவகையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அந்தப் போட்டியிலும் வழக்கம்போல கடைசி ஓவரில் சிறப்பாக அடித்து வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியது சென்னை அணி. ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் தோல்வியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பல போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தும் சிஎஸ்கே அந்த வெற்றியை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து சென்னை அணி கோப்பையை கைப்பற்றி விடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தநிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டில் தோனி புகைப்படங்களை வரைந்து வைத்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் தோனி மீது மிகுந்த அன்பு கொண்ட ரசிகராக இருந்து வருகிறார்.
தோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன், தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில், ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுவதும் வண்ணம் பூசி உள்ளார். மேலும் தோனி படத்தினையும் சுவரில் வரைந்துள்ளார். மேலும் ‘தோனி ரசிகனின் வீடு’ என்றும் எழுதியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.