நாளை அரையிறுதி! இந்தியாவை வீழ்த்த தீவிர பயிற்சியில் நியூசிலாந்து அணி
Newzland cricketers have practice before semifinal
2019 உலகக்கோப்பை சாம்பியனை தீர்மானிக்க இன்னும் 3 முக்கிய போட்டிகளே மீதமுள்ளன. நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் அரையிறுதி நடைபெறவுள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு இதேபோன்று அரையிறுதியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல் இந்த முறையும் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் நியூசிலாந்து வீரர்கள் உள்ளனர். நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கேரி ஸ்டீட் அந்த அணிக்கு தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கப்டில், டெய்லர் இந்த உலகக்கோப்பையில் இதுவரை சரியாக ஆடவில்லை. வில்லியம்சன், நீசம், கிராண்ட்ஹோம் போன்றவர்களின் பேட்டிங் மற்றும் போல்ட், பெர்குயூசன் போன்றவர்களின் பந்துவீச்சினால் தான் நியூசிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.
8 லீக் போட்டிகளில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் வெற்றிபெற்றும் பாக்கிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடம் தோல்வியையும் தழுவியுள்ளது. இந்தியாவுடனான ஆட்டம் மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது.