"எத்தனை சதம் அடித்தாலும் அதை சாதிக்கும் வரை திருப்தி இருக்காது" ரோகித் சர்மா அதிரடி பேட்டி
No satisfaction if wont win the finals
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா இதுவரை ஐந்து சதங்களும் 647 ரன்களும் எடுத்துள்ளார்.
2019 உலக கோப்பை தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக அமைந்து வருகிறது. முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி சதம் அடித்த அவர் இதுவரை 5 சதங்களை விளாசியுள்ளார். மேலும் 647 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
இந்திய அணியில் சிறப்பான பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. வரும் செவ்வாய்கிழமை இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துடன் மோத வேண்டும்.
எப்படியும் இந்திய அணி இன்னும் இரண்டு ஆட்டங்கள் ஆடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைக்கும். 2003ல் சச்சின் அடித்த 673 ரன்களே ஒரு உலக கோப்பை தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, "போட்டியை வெல்வதே முக்கியம். எத்தனை ரன்கள் எடுக்கிறோம்; எத்தனை விக்கெட்டுகள் விழுகிறோம் என்பது முக்கியமல்ல. கிரிக்கெட் வீரர்கள் ஆகிய எங்களுக்கு எங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதே லட்சியம். அந்தக் கடமை கோப்பையை வெல்வதே.
ஒவ்வொரு உலக கோப்பைக்கும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இப்பொழுது எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் பணி அரையிறுதியில் வென்று இறுதி போட்டியில் வெல்வதே. அதனை விட்டுவிட்டு எத்தனை ரன்கள் அடித்தாலும் எத்தனை சதங்கள் அடித்தாலும் திருப்தி இருக்காது" எனக் கூறியுள்ளார்.