அம்பயர் உங்களுக்கு மட்டுமா தவறு செய்தார்; எங்களுக்கும் தான் - நாசுக்காக சமாளித்த ரோகித் சர்மா!
Not only you we also affected by umpire Rohit sharma
2019 ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் மலிங்கா வீசிய நோபாலை அம்பயர் சரியாக கவனிக்காமல் விட்டதால் பெங்களூரு அணி வீரர்களும், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதை மட்டும் அம்பயர் கவனித்திருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்திலையில் ஆட்டத்தின் முடிவில் இதுகுறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் கோலி மிகவும் விரக்தியுடன் பேசினார். "நாங்கள் ஏதோ சாதாரண க்ளப் மேட்ச் ஆடவில்லை; இது ஐபிஎல். அம்பயர்கள் தங்கள் கண்ணை எப்போதுமே விழித்து வைத்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கடைசி பந்தில் நோபால் கொடுத்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும்" என்றார்.
பின்னர் அவரைத் தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, "நான் எல்லைக்கோட்டை தாண்டிய பிறகு தான் எனக்கு அது நோபால் என்றே தெரியும். இதைப்போன்ற தவறுகள் கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல. இதேபோல தான் 19வது ஓவரில் பும்ரா வீசிய பந்திற்கு வைட் கொடுக்கப்பட்டது. அது கண்டிபாக வைட் இல்லை என்று அனைவருக்கும் தெரியும். இதைப்போன்ற தவறுகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகின்றன.
இதில் வீரர்களாக நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நடுவர்களுக்கென்று பல்வேறு வசதிகள் உள்ளன. அவர்கள் தான் இதனை சரியாக கவனிக்க வேண்டும். நாங்கள் தவறு செய்தால் திருத்தி கொள்வது போன்று நடுவர்களும் அவர்களது தவறினை திருத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.