வாழ்வா சாவா போராட்டத்தில் பாகிஸ்தான் அணி!: அரை இறுதி கனவு பலிக்குமா?!.. நெதர்லாந்துடன் இன்று மோதல்..!
வாழ்வா சாவா போராட்டத்தில் பாகிஸ்தான் அணி!: அரை இறுதி கனவு எட்டுமா?!.. நெதர்லாந்துடன் இன்று மோதல்..!
எட்டாவது உலக கோப்பை டி-20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2 வில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவுடனும், 2 வது போட்டியில் ஜிம்பாவேயுடனும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், பெர்த் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் 5 வது இடத்தையும், நெதர்லாந்து கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு முற்றிலும் மங்கிவிடும். மீதமுள்ள போட்டிகள் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.
முன்னதாக இவ்விரு அணிகளும் ஒரே ஒரு முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து வரும் போட்டிகளில் வங்காளதேச அணியுடனும் வலுவான அணியான தென்னாப்பிரிக்காவுடனும் மோத இருப்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது.