இந்திய கிரிக்கெட் வீரர்களின் செயலுக்கு பாகிஸ்தான் அமைச்சர்கள் கண்டனம்!
Pakistan opposes for indian army cap
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள், இந்திய ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து விளையாடினர். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைவு கூறும் வண்ணம் இந்திய அணியின் வீரர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வெறுமனே தொப்பியோடு நின்று விடாமல், இந்த போட்டியின் மூலம் வீரர்களுக்கு கிடைக்கும் மொத்த வருமாணத்தையும் நாட்டின் பாதுகாப்பு படைக்கும், தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தனர்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாக்கிஸ்தான் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளையாட்டினை அரசியலாக்க முயற்சிக்கும் இந்திய அணியினர் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, "இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தபொழுது ஐசிசி மட்டும் பார்க்கவில்லையா? இந்த பிரச்சனையை பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பே, ஐசிசி தாமாகவே முன்வந்து இதனை கண்டிப்பது தானே சிறந்தது" என கூறியுள்ளார்.
மேலும், அந்நாட்டின் தகவல்தொடர்பு துறை அமைச்சரான ஃபவத் சௌத்திரி தனது டுவிட்டர் பக்கத்தில், "அவர்கள் ஆடியது வெறும் கிரிக்கெட் அல்ல; இப்படி ஒரு அருமையான விளையாட்டை அரசியலாக்கியதற்கு ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மேலும் இந்திய அணியினரின் இந்த செயலை தடுக்கவில்லையெனில், காஷ்மீரில் இந்தியர்கள் செய்யும் அட்டூழியத்தை எதிர்த்து பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை போராட்டம் செய்ய தூண்டுவேன்" என பதிவிட்டுள்ளார்.