உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணியை உருவாக்குவேன் - பாக். பிரதமர் இம்ரான் கான் சபதம்!
Pakistan pm started work on best cricket team
சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைய முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்தது.
மேலும் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. இதனால் பாக்கிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த அணியினர் மீது சற்று அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ள பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அமெரிக்கா வாழ் பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் உரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், "மிக சிறந்த வீரர்களை அணியில் இணைத்து அடுத்த தொடருக்குள் உலகின் மிகச்சிறந்த அணியை உருவாக்கும் பணியை நான் துவங்கிவிட்டேன்" என கூறியுள்ளார்.
1992ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாக்கிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வென்று தந்தவர் தான் தற்போதைய பிரதமர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பையில் இந்தியாவுடன் பாக்கிஸ்தான் மோதுவதற்கு முன்னர் கூட அந்நாட்டு வரர்களிடம் உரையாடி உத்வேகம் அளித்தார்.