பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே ஆல்-அவுட் ஆன இங்கிலாந்து அணி..!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்னே ஆல்-அவுட் ஆன இங்கிலாந்து அணி..!
பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமயிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி சமீபத்தில் நடந்த டி-20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடரின் அட்டவணைப்படி இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி இன்று தொடங்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது.
இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட 8 வீரர்கள் மற்றும் அணி உதவியாளர்கள் 5 பேர் என மொத்தம் 13 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு பிரச்சினையால் அவர்கள் அவதிப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அவர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்றும் வைரஸ் தொற்றின் காரணமாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியை ஒருநாள் தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு அவர்களது உடல் நிலையை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.