உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி!
PM Modi wishes PV Sindhu for world champion
உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவிற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகின் டாப் 8 பாட்மிண்டன் வீரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய உலக சீரீஸ் பாட்மிண்டன் (BWF) தொடர் சீனாவின் குவாங்சோவ் நகரில் நடைபெற்றது. இதன் மகளிர் பிரிவில் உலகின் 8ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து முதன்முறையாக கலந்துகொண்டார்.
இத்தொடரில், தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, இறுதிப்போட்டியில் உலகின் 5ம் நிலையில் உள்ள ஜப்பான் வீராங்கனை நோசாமி ஒகுஹராவை எதிர்த்து விளையாடினார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய சிந்து முதல் செட்டை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து, 2வது செட்டையும் 21-17 என்ற நேர் செட் கணக்கில் கைப்பற்றி, ஜப்பான் வீராங்கனையை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றில் இடம் பிடித்த சிந்துவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீராங்கனையின் மிகப்பெரிய வெற்றி இது. ஒவ்வொரு இந்தியரும் அந்த பெண்ணை குறித்து பெருமைப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.