ராஜஸ்தானை சாய்த்த பஞ்சாப்..!! தொடர்ச்சியாக 2 வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்..!!
ராஜஸ்தானை சாய்த்த பஞ்சாப்..!! தொடர்ச்சியாக 2 வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்..!!
ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றியை சுவைத்தது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் நேற்று நடந்த 8 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக கேப்டன் ஷிகர் தவான்- பிரப்சிம்ரன் சிங் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் அரைசதம் விளாசினார். அவர் 34 பந்தில் 60 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்ததாக பானுகா ராஜபக்சே களமிறங்கினார்.
பானுகா ராஜபக்சே 1 பந்தில் 1 ரன் எடுத்திருந்த போது ஷிகர் தவான் அடித்த பந்து கையில் பலமாக தாக்கிய நிலையில், காயமடைந்து வெளியேறினார். பின்னர் ஜித்தேஷ் சர்மா தவானுடன் இணைந்து அதிரடி காட்ட, நிதானமாக ஆடிய ஷிகர் தவான் 36 பந்தில் அரைசதத்தை எட்டினார். ஜித்தேஷ் சர்மா 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ராஸா 1, ஷாருக்கான் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 86 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 60 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ய்வேந்திர சஹல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் -ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்கம் அளித்தனர்.
ஜெய்ஸ்வால் (11), அஸ்வின் (0), ஜோஸ் பட்லர் 19 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதன் பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன்-பட்டிக்கல் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சஞ்சு சாம்சன் 42, ரியான் பராக் 20, பட்டிக்கல் 21 ரன்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டம் பஞ்சாப் அணியின் பக்கம் சாய்ந்தது.
இந்த நிலையில் இணைந்த ஹெட்மயர்- ஜுரைல் ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. ஹெட்மயர் 36 (18) ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்ட நிலையில், அந்த அணியின் நம்பிக்கையும் நொறுங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்த ராஜஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.