முதல் உலக கோப்பையிலேயே பல சாதனைகளை முறியடித்த பாக்கிஸ்தான் இளம் வீரர்!
saheen afridi made more records in worldcup
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் அணி தன்னுடைய இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இன்று மோதியது.
முதலில் பேட்டிங் செய்த அந்த பாக்கிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இமாம்-உல்-ஹாக் 100, பாபர் அசாம் 96 ரன்கள் எடுத்தனர். அசாம் 4 ரன்னில் சதத்தை நழுவ விட்டார். பாகிஸ்தான் அணி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய பங்களாதேஷ் அணி 45-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். உலகக் கோப்பை போட்டியில் மிகக்குறைந்த வயதில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையை அப்ரிடி படைத்துள்ளார். இவருக்கு தற்போதைய வயது 19 வருடம் 90 நாட்கள். இதற்கு முன்பு கென்யாவைச் சேர்ந்த காலின் ஒபோயா(21 வருடம் 212 நாட்கள்) எடுத்த 5 விக்கெட்டுகளே குறைந்த வயதில் எடுத்ததாக இருந்தது.
இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அப்ரிடி. ஒரு உலக கோப்பை தொடரில் 20 வயதிற்கும் குறைவான வீரர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது இந்த முறை தான். இந்த சாதனைக்கும் அப்ரிடி சொந்தக்காரரானார். மேலும் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது தான் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.