உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்த இந்திய அணி.! பலரது சாதனைகளை முறியடித்த ஷமி.!
உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல் அணியாக நுழைந்த இந்திய அணி.! பலரது சாதனைகளை முறியடித்த ஷமி.!
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதியது. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
இதன்மூலம் 7 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. நடப்பு தொடரில் இந்திய அணி மட்டுமே அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று தற்போது அரையிறுதியை உறுதி செய்துள்ளது. நேற்று நடந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் 44 எடுத்த ஜாகீர் கானின் சாதனையை ஷமி ௪௫ விக்கெட்டுகள் எடுத்து முறியடித்தார். அதேபோல் அதிகமுறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் 5 விக்கெட்கள் வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ஷமி சமன் செய்தார். மேலும், இந்திய அணிக்காக அதிகமுறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும், ஷமி படைத்தார்.